
திருத்தணி ம.பொ.சி. சாலை மார்க்கெட் அருகில் கடந்த 1949 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. பஸ் தொழிலாளர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக நிறுவப்பட்ட இந்த சிலையை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் பக்தவச்சலம் திறந்து வைத்தார். அன்று முதல் இன்று வரை அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் காந்தி ஜெயந்தி மற்றும் முக்கிய விழா நாட்களில் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். திருத்தணியில் மையப் பகுதி மற்றும் மார்க்கெட் உள்ள இந்த பகுதியில் தினசரி நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுவதாலும் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பகுதி கடந்து செல்வதாலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் சிலையை அப்புறப்படுத்தி தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் முகப்பில் அமைப்பதற்கு ஏற்கனவே அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நேற்று டிஎஸ்பி கந்தன் மேற்பார்வையில் நெடுஞ்சாலைத்துறை நகராட்சி துறை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ராட்சத கிரேன் மூலம் மகாத்மா காந்தி மார்பளவு சிலையை சேதாரம் இல்லாமல் பத்திரமாக பெயர்த்தெடுத்தனர். மேலும் இங்கு அமைக்கப்பட்டிருந்த மணி மண்டபம் அகற்றப்பட்டது. விரைவில் இந்த சிலை அரக்கோணம் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் முகப்பில் வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த சிலை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.. சிலையை அப்புறப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் மலர்வழி நகரமைப்பு அலுவலர் தயாநிதி. நகராட்சி பொறியாளர் விஜயராஜ காமராஜர். மேலாளர் ஹரிபாபு. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ் இன்ஸ்பெக்டர் மதியரசன் . வருவாய் ஆய்வாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.