
தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி இந்துசமய அறநிலையத்துறை சார்பாக திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலலேசுவரர் திருக்கோயிலின் உபத்திருக்கோயிலான சோமாசிப்பாடி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விரிவுப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், உடனிருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, அன்னதானம், புணரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக 2024 25 சட்டமன்ற அறிவிப்பின்படி அன்னதான திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டு 100 நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 3500/- என்ற செலவினத் திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையினை உயர்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலின் உபக்கோயில்களான சோமாசிப்பாடி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 50 பயனாளிகளிலிருந்து தற்போது 100 (பிரதி செவ்வாய் கிழமை மற்றும் மாத கிருத்திகை நாட்கள்) பயனாளிகளுக்கு உயர்த்தியும், கிரிவலப்பாதையில் உள்ள அருள்மிகு குபேரலிங்கம் திருக்கோயிலில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 25 பயனாளிகளிலிருந்து தற்போது 50 பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் அவர்கள் விரிவுப்படுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவர் திருக்கோயில் இணை ஆணையர் / செயல்அலுவலர் சி.ஜோதி, பக்தர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.