
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் 2 அரசு பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாது என நேற்று காலையில் பயணிகளை ஏற்றி செல்ல ஓட்டுநர்களும் நடத்துனர்களும் மறுத்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுக்குடிக்கு அந்த அரசு பேருந்துகளை வழிமறித்து ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால், திருச்செந்தூர் போக்குவரத்து கழக மேலாளர் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் சென்று வர வேண்டாம் என தெரிவித்ததாக ஓட்டுனர் தெரிவித்தார். இதுகுறித்து பயணிகள் நல சங்க தலைவர் அரசன் துரை என்பவர் திருச்செந்தூர் போக்குவரத்து கழக மேலாளரிடம் போனில் கேட்ட போது, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பேருந்துகளில் 56 ரூபாய் டிக்கெட் வசூல் செய்யப்படும் பேருந்துகள் மட்டும் நேரடியாக செல்ல முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். சமாதான கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காத நிலையில் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்து அரசு பேருந்துகள் செல்வது தொடர்வதால் மார்ச் 6ஆம் தேதி திட்டமிட்டபடி கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.