
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பஸ் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சார்லஸ்(24), சொந்தமாக வேன் வைத்து டிரைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு முண்டியம்பாக்கம் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஏமப்பூர் அருகே தனியார் பஸ் மீது எதிர்பாராத விதமாக மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்ணெய்நல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து சார்லஸ் சகோதரர் ஆபிரகாம் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.