சென்னை, செப்டம்பர் 2025: புற்றுநோய் சிகிச்சையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இயங்கி வரும் எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் உலக ரோஜா தின அனுசரிப்பை தனித்துவமிக்கதாக கொண்டாடியது. வாழ்க்கைத்தரம், பாதிப்பிலிருந்து மீண்டெழும் திறன் மற்றும் மானுட உணர்வின் அசைக்க முடியாத சக்தியின் கொண்டாட்டமாக நடைபெற்ற இந்த மாலைநேர நிகழ்வு இசை, நடனம், சிரிப்பு மற்றும் உத்வேக உணர்வால் பிற வழக்கமான கொண்டாட்டங்களிலிருந்து மாறுபட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட புற்றுநோயாளிகளுக்கும், மற்றும் புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர்வாழும் அனைத்து நபர்களுக்கும், ‘புற்றுநோய் அவர்கள் யார் என்று வரையறை செய்வதில்லை; மாறாக அவர்களது நம்பிக்கையே அவர்கள் யார் என்பதை நிர்ணயிக்கிறது’ என்ற நினைவூட்டலாக அமைந்தது.
குறும்புத்தனம் மிக்க குழந்தைகளிலிருந்து மனஉறுதி கொண்ட வயது வந்த நபர்கள் வரை புற்றுநோயிலிருந்து மீண்ட 100-க்கும் அதிகமான நபர்கள் இந்நிகழ்வில் ஒன்று கூடினர். நோயாளியாக அல்லாமல் மிகப்பெரிய சவாலை சமாளித்து வெற்றி கண்ட வீரர்களாக இதில் பங்கேற்றனர். சிகிச்சையின் மூலம் குணமடைந்து உயிர்வாழும் இவர்களின் பங்கேற்பு, இந்நிகழ்வை வளம், சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியை துடிப்புடன் வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக வெற்றிகரமாக மாற்றியிருந்தது. இவர்கள் ஒவ்வொருவரின் புன்னகையும், வாழ்க்கைக் கதையும் மற்றும் அவர்கள் வழங்கிய கலைநிகழ்ச்சிகளும், புற்றுநோய் என்பது ஒரு முடிவல்ல; மாறாக ஒரு புதிய விடியலின் தொடக்கம் என்பதற்கு சாட்சியமாக திகழ்ந்தன.
பின்னகி பாடகி பாப் ஷாலியின் மனதை வருடும் இன்னிசை இக்கொண்டாட்டத்தை குதூகலமான நிகழ்வாக ஆக்கியது. திரைப்பட நடிகர்கள் திரு. கருணாகரன், திரு. J. லிவிங்ஸ்டன், திரு. ரமேஷ் கண்ணா, மற்றும் திரு. தர்ஷன் ஆகியோரின் கனிவான, ஊக்கமளிக்கும் வார்த்தைகள் இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன. கலக்கலான நடனங்களும், இனிமையான இசையும் இடம் பெற்ற கலை நிகழ்ச்சிகள் பங்கேற்பாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச் சென்ற நிலையில், புற்றுநோயை வெற்றி கண்ட சாதனையாளர்களின் ஊக்கமளிக்கும் நிஜ வாழ்க்கை கதைகள் இதயங்களை ஆழமாக தொட்டன. அவர்களது சவால் நிறைந்த ஆனால் நம்பிக்கையும், தைரியமும் மிக்க பயணங்கள் பற்றிய பகிர்வுகள் பார்வையாளர்களுக்கு உத்வேகத்தையும், தளராத நம்பிக்கையையும் அளித்தன. எந்தவொரு நபரும் புற்றுநோயை தனியாக எதிர்த்து போராட வேண்டியதில்லை என்பதை நினைவூட்டும் விதத்தில் அன்பு, ஆதரவு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஒருமிப்பால் நம்பிக்கை ஊட்டும் சூழல் இந்நிகழ்வில் நிலவியது.
எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்-இன் மருத்துவ புற்றுநோயியல் துறையின் இயக்குநரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். M. A. ராஜா, தனது உரையில் கூறியதாவது: “உலக ரோஜா தினம் என்பது, வழக்கமான ஒரு அனுசரிப்பு மற்றும் நினைவூட்டல் என்பதையும் விட மிகமிக அதிகமான அர்த்தங்களை கொண்டது. நம்பிக்கை, கருணை மற்றும் ஒருமித்த ஒற்றுமை உணர்வு ஆகியவற்றின் உறுதிமொழியாக இருக்கிறது. அன்புடன் ஒவ்வொரு நோயாளியும் அணுகி ஊக்கப்படுத்துகிற, புற்றுநோயிலிருந்து மீண்டு வாழும் ஒவ்வொரு நபரின் மீள்திறனையும், தைரியத்தையும் பாராட்டுகிற மற்றும் நோயாளிகளை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிற ஒவ்வொரு நபரின் தியாகத்தையும், சேவையையும் நெஞ்சார பாராட்டுவதற்கான ஒரு நாளாகவும் இது இருக்கிறது. புற்றுநோய் என்பது வெறுமனே நோயாளி மட்டும் பங்கேற்கிற ஒரு யுத்தமல்ல; அந்நபரின் ஒட்டுமொத்த குடும்பமும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக மேற்கொள்கிற ஒரு பயணம் இது. எம்ஜிஎம்-ல் எமது நோயாளிகளுடனும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடனும் இப்பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாங்களும் இணைந்து நடக்கிறோம்; ஒருபோதும் அவர்கள் தனித்து விடப்படுவதில்லை என்ற உணர்வு அவர்களிடம் இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.”
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 75,000 குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிற நிலையில் இந்தியா எதிர்கொள்கிற இந்த மிகப்பெரிய சவால் குறித்து டாக்டர். ராஜாவுடன் இணைந்து, குழந்தைகளுக்கான புற்றுநோயியல் துறையின் தலைவரும் மற்றும் எலும்புமஜ்ஜை மாற்று சிகிச்சை நிபுணருமான டாக்டர். தீனதயாளனும் தெளிவான தகவல்களை வழங்கினார். புற்றுநோயின் சுமை மிகப்பெரியது என்றாலும் அவர்களது செய்தியானது ஆக்கப்பூர்வ நம்பிக்கையை வழங்குவதாக இருந்தது. இலக்கு சிகிச்சைகள், இம்யுனோதெரபி மற்றும் துல்லியமான கீமோதெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பல புரட்சிகர முன்னேற்றங்களினால் இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய்கள் என்பவை வெறுமனே சிகிச்சையளிக்கக்கூடியவை மட்டுமல்ல; குணப்படுத்தக்கூடியவையாகவும் அவைகள் இருக்கின்றன. “உரிய நேரத்திற்குள் செய்யப்படும் நோயறிதல் சோதனைகள் மற்றும் விரிவான சிகிச்சையின் மூலம் உயிர்கள் காப்பாற்றப்படுவது மட்டுமல்லாமல் வாழ்க்கையை செழுமையானதாகவும் அவைகள் மாற்றுகின்றன; பாதிப்பிலிருந்து மீண்டு உயிர்பிழைப்பது, தரமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
உலக ரோஜா தினத்தின் அனுசரிப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வு ஒரு சக்தி வாய்ந்த செய்தியை அனைவர் மனதிலும் பதிய வைத்திருக்கிறது. ‘புற்றுநோயானது பாதிப்பின் தழும்புகளை விட்டுச் செல்லலாம். ஆனால் மானுட நம்பிக்கை மற்றும் தைரிய உணர்வின் வெளிச்சத்தை அதனால் ஒருபோதும் மங்கச் செய்ய இயலாது’ என்பதே அந்தச் செய்தி. புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினர்களும் மற்றும் சிகிச்சை வழங்குநர்களும் ஒன்றுகூடி கைகோர்த்து தளராத நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்வோம் என்ற உறுதியான பிரகடனமாக உலக ரோஜா தின நிகழ்வு அமைந்தது.
