
மதுரையிலிருந்து – சிறுவாச்சூர், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 178 கி.மீ தூரம்
உயிரைக் காக்க விரைந்த இதயம
திருச்சி, செப் 02
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயது இளைஞர் மூளைச்சாவு (Brain Death) அடைந்த நிலையில், அவரது இதயம் தானமாக வழங்கப்பட்டது.
உயிரைக் காக்கும் அந்த இதயம், மதுரையிலிருந்து சுமார் 178 கி.மீ. தொலைவில் உள்ள பெரம்பலூர், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. காலை 10:28 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்ட இதயம், வெறும் 1 மணி நேரம் 54 நிமிடங்களில், மதியம் 12:22 மணிக்கு சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சென்றடைந்தது.
மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் (IGP) V. பாலகிருஷ்ணன், IPS அவர்களது அறிவுறுத்தலின்படி, இந்த அவசரகால உறுப்பு மாற்றுப் பயணம் தடையின்றி நடைபெற, மதுரை – திருச்சி – பெரம்பலூர் வழித்தடத்தில் திருச்சி காவல்துறையினர் போக்குவரத்தைச் சீரமைத்து, பசுமை வழித்தடத்தை (Green Corridor) ஏற்படுத்தினர்.
இதன் மூலம் குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட இதயம், வெற்றிகரமாக பயனாளிக்கு பொருத்தப்பட்டு, இதய மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தற்போது இதயத்தைப் பெற்ற பயனாளி நலமுடன், உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மனிதநேயப் பணிக்காக, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பிலும், இதயத்தைப் பெற்ற பயனாளியின் குடும்பத்தினர் சார்பிலும், உயிரைக் காக்கும் இந்த அவசரகால பயணம் தடையின்றி நடைபெற, முழுமையான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் வழங்கிய திருச்சி மண்டல காவல்ததுறையினரின் அர்ப்பணிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தன்னலமற்ற சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
