
திருவண்ணாமலை, செப்.2–
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொசுக்களால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு களப்பணி நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, மழைக்காலங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றவும், டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கவும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, வீடு வீடாகச் சென்று கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல், தண்ணீர் தேங்கும் பகுதிகளை அகற்றுதல், தேவையான இடங்களில் கொசுப்புழு ஒழிப்பு மருந்துகளைப் பயன்படுத்துதல் மற்றும் கொசு மருந்து புகைபரப்புதல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்ட 90 டெங்கு கொசுப்புழு கண்காணிப்பு பணியாளர்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மழைநீர் தேங்கும் இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிமெண்ட் தொட்டிகள், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பூந்தொட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள், டிரம்கள், குடங்கள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தேவையற்ற மற்றும் பிற கழிவுப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், தண்ணீர் தொட்டிகள், டிரம்கள், குடங்கள் உள்ளிட்ட பாத்திரங்களை முழுமையாக மூடி வைக்க வேண்டும். மொட்டைமாடி, தாழ்வான பகுதிகள் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்குகிறதா என்பதை தினமும் கண்காணித்து, சிறிய அளவில் தண்ணீர் தேங்கியிருந்தாலும் உடனடியாக அகற்ற வேண்டும்.
மேலும், வாரத்திற்கு ஒருமுறை வீடு மற்றும் சுற்றுப்புறத்தை முழுமையாக சுத்தம் செய்து, தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு களப்பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாமல், அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவசுப்பிரமணியன், மாவட்ட சுகாதார அலுவலர் (திருவண்ணாமலை) மருத்துவர் வெங்கட்ராமன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
