
செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் – முனைவர் ச.சு.ஜைனுதீன் தமிழக அரசுக்கு கோரிக்கை
செய்யாறு, செப். 3
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படாமல், செடி, கொடிகள் வளர்ந்து பாழடைந்த குடியிருப்புகள் போல் காட்சியளிப்பதாகவும், பொதுமக்களுக்கான கழிப்பிடம் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் நீதிமன்றத்திற்கு வழக்குகள் தொடர்பாக வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூகப் போராளியும், நிறுவனத் தலைவருமான முனைவர் ச.சு.ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குத் தொடர்புடையவர்கள் வந்து செல்கின்றனர். நீதியை நாடி வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக இருப்பது மிகவும் அவசியமானதாகும்.
ஆனால், நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் நீண்ட காலமாக போதிய பராமரிப்பின்றி காணப்படுவதுடன், சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து பாழடைந்த குடியிருப்புகள் போல் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் குடியிருப்புகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்தும் கவலை ஏற்படுகிறது.
மேலும், நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது கழிப்பிடம் பழுதடைந்த நிலையில் இருப்பதால், குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் நீண்ட நேரம் நீதிமன்ற பணிகளுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, தமிழக சட்டத்துறை அமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதிகளின் குடியிருப்புகளை ஆய்வு செய்து, தேவையான பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கான பழுதடைந்த கழிப்பிடத்தை சீரமைத்து சுகாதாரமான முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
“நீதியை நாடி நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படக்கூடாது. நீதிமன்ற வளாகமும், நீதிபதிகளின் குடியிருப்புகளும் முறையாக பராமரிக்கப்படுவது அவசியம். தமிழக அரசு இந்த கோரிக்கையை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முனைவர் ச.சு.ஜைனுதீன் வலியுறுத்தியுள்ளார்.
