
சேலம் சென்ட்ரல் சட்ட கல்லூரியில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அளவிலான சுற்றுச்சூழல் சட்டம் சார்ந்த மாதிரி நீதிமன்ற பசுமை வழக்கு வாத போட்டி நடைபெற்றது. மாநிலமெங்கும் இருந்து பல பள்ளிகளின் சார்பிலான அணிகள் பங்குபெற்ற இந்த போட்டியின் பரிசளிப்பு விழா கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியின் மாதிரி வழக்கில் பொருண்மை புலிகள் சரணாலயம் மற்றும் காடுகள் ஆக்கிரமிப்பு மனித விலங்குகள் மோதல் சார்ந்து கொடுக்கப்பட்டது. இந்த மாதிரி வழக்கை தமிழகமெங்கும் இருந்து வந்த பள்ளிகளின் அணிகள் திறம்பட வாதிட்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இந்த போட்டியின் பரிசளிப்பு விழா சேலம் சென்ட்ரல் சட்ட கல்லூரியின் தலைவர் சரவணன் தனபாலன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு வழக்கறிஞர்கள் சங்க தலைவரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் உறுப்பினருமான மூத்த வழக்கறிஞருமான பாலசுப்பிரமணியம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் முனைவர் அழகுமணி ஆகியோர் கலைந்து கொண்டு பரிசளித்து மாணவர்களை வாழ்த்தினார். இவ்விழாவில் தலைமை உரை ஆற்றிய சேலம் சென்ட்ரல் சட்ட கல்லூரியில் தலைவர் சரவணன் தனபாலன் தனது தலைமையில் மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தினருக்கு இயற்கையை பேணி பாதுகாப்பதில் உள்ள முக்கிய பொறுப்பை உணர்த்தும் வகையில் தான் இந்த மாதிரி நீதிமன்ற வழக்கு வாதப்போட்டி நடைபெறுகிறது என்று கூறி தனது உரையை தொடங்கினார். இயற்கை வள பாதுகாப்பினை நாம் தொடர்ந்து புறக்கணித்து கொண்டே வந்ததன் விளைவாக தான் நேபாள பெருவெள்ளம், பெருகி வரும் காட்டு தீ நிகழ்வுகள், மனித விலங்குகள் மோதல் போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றது என்றும் மனிதர்கள் ஆகிய நாம் முழுக்க முழுக்க இயற்கையை சாந்து வாழ வேண்டியுள்ள அவசியத்தை உணர்ந்து இயற்கை வளங்களை பேணி பாதுகாத்தல் வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய மூத்த வழக்கறிஞர் முனைவர் அழகுமணி பள்ளி அளவிலான இந்த மாதிரி நீதிமன்ற போட்டியில் பங்கு பெற்ற பள்ளி மாணவர்களின் வாதங்களை பார்க்கும் போதும் ,எழுத்துப்பூர்வமான வாதுரைகளை வாசித்த போதும் ஒரு மூத்த வழக்கறிஞர்கள் எந்தவிதமான தன்மையுடன் நீதிமன்றத்தில் வாதிடுவார்களோ அந்த அளவிற்கான நிதானம் சட்ட தெளிவு பள்ளி பருவத்திலேயே உள்ளது மிகுந்த வியப்பளிக்கிறது என்று கூறி தனது உரையை தொடர்ந்தார். தொடர்ந்து விழாவின் நிறைவுறையை ஆற்றிய மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் கூறுகையில் மாணவர்கள் இந்த காலகட்டத்தில் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகிவிட்ட இந்த காலகட்டத்தில் மாணவர்கள் விடாமுயற்சியுடன் இலக்கை அடையும்வரை தொடர்ந்து பயணிப்பது அவசியம் என்றும் கூறினார். முன்னதாக விழாவில் உதவி பேராசிரியர் புஷ்பவனம் வரவேற்புரை ஆற்றினார். விழாவின் முடிவில் உதவி பேராசிரியர் சத்தியபிரியா நன்றியுரை ஆற்றினார்.
