
கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ், பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் – அமைச்சர் சீ.ரமேஷ் தொடங்கி வைத்தார்!
திருவண்ணாமலை, நவ.23:
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, 108 அவசர ஊர்திகள் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தொடங்கி வைத்தார்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இன்று (23.11.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், 108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவைகளை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், போளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அபிஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகள் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் 108 அவசர ஊர்திகள் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தற்காலிக பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக இயக்கப்பட உள்ள சிறப்புப் பேருந்துகள் மற்றும் பள்ளி வாகனங்களில் கட்டணமில்லா இலவசப் பேருந்து சேவை தொடர்பான ஒட்டு வில்லைகளையும் ஒட்டினார்.
தொடர்ந்து, கிரிவலப் பாதையில் ரமணாஸ்ரமம் அருகே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள், அவசர சிகிச்சை அளிக்கும் நடைமுறைகள் மற்றும் தேவையான மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் செயல்பாடுகள் மற்றும் அவசர காலங்களில் அவை மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வெங்கட்ராமன், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் பரணிதரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
