
வாணியம்பாடி :07
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியின் குடிநீர் தேவைக்காக கொடையாஞ்சி கிராமத்தில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
சாலையின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுவதுடன், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலை கடுமையாக சேதமடைந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்டகாலமாக அவதியடைந்து வந்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் பலமுறை மனு அளித்து கோரிக்கை வைத்ததன் பேரில், பெரியபேட்டை முதல் கொடையாஞ்சி வரை புதிய சாலை அண்மையில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிதாக குடிநீர் குழாய்களை மீண்டும் அதே சாலையில் பதிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்த நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சாலை சேதமடையாத மாற்றுப்பாதையில் குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், மாவட்ட ஆட்சியரின் உறுதியை மீறி, ஒப்பந்ததாரர்கள் மீண்டும் சாலையில் குழாய் பதிக்கும் பணியை தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு கிராம மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்தப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தத் தயாராக இருப்பதாக கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
