
திருப்பத்தூரில் வேலைக்குச் சென்ற பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை. வாலிபர் கைது!
வாணியம்பாடி :ஜூலை-7
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் அதிகாலை வேலைக்குச் சென்ற 50 வயது பெண்ணை வலுக்கட்டாயமாக பூங்காவுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக 23 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் அதிகாலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நகராட்சிக்கு சொந்தமான பூங்கா அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், கொலை மிரட்டல் விடுத்து வலுக்கட்டாயமாக பூங்காவுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், புதுப்பேட்டை அருகே கல்நார்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சரத்குமார் (23) என்பவர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
நகரின் மையப்பகுதியில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
