
பொன்னேரி செப்-3
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, வார்டு உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செய்தியாளர்களிடம் பேசிய வார்டு உறுப்பினர்கள், “எங்களது வார்டுகளில் பொதுமக்களுக்கான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் பேரூராட்சி நிர்வாகம் செய்து தருவதில்லை. வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ, மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தங்களது வார்டுகளில் எந்தவொரு பணியையும் செய்ய முடியாமல் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் முடங்கிப் போயுள்ளோம்” என்று குற்றம் சாட்டினர்.மேலும், “பேரூராட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மன்றக் கூட்டம் நடத்தப்படவில்லை. இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நீதிமன்றத்தை அணுகி பேரூராட்சி மன்றக் கூட்டத்தை முறைப்படி நடத்தவும், வார்டு உறுப்பினர்களுக்கு உரிய முறையில் நிதி ஒதுக்கவும் சட்டபூர்வமாக உத்தரவு பெறவுள்ளோம்,” என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.நிர்வாகக் குளறுபடியால் பருவமழைக் காலத்தில் மீஞ்சூர் பகுதியில் பெரும் மழை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
