சென்னை, செப்டம்பர் 27, 2026: உலக இதய தினத்தை முன்னிட்டு, சிம்ஸ் மருத்துவமனை ‘சிம்ஸ் ரிதம் ஆஃப் லைஃப்’ என்று பெயரிடப்பட்டிருந்த 5 கிலோமீட்டர் விழிப்புணர்வு நடைபயணத்தை ஏற்பாடு செய்து நடத்தியது. வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணத்தை, சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி, மூத்த இயக்குநரும் மூத்த இதய நோய் மருத்துவ ஆலோசகருமான டாக்டர் கே. ஜெய் சங்கர் மற்றும் இயக்குநரும் மூத்த இதய நோய் மருத்துவ ஆலோசகருமான டாக்டர் டி. எஸ். ஸ்ரீநாத் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஆற்காடு சாலை நெடுகிலும் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் 16 முதல் 70 வயதுக்குட்பட்ட 500-க்கும் மேற்பட்ட நபர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதய நோய்கள் குறித்தும், குறிப்பாக அவற்றின் அறிகுறிகளை முன்கூட்டியே உணர்ந்து கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்,ஆண்டுதோறும் செப்டம்பர் 29 அன்று உலகெங்கிலும் ‘உலக இதய தினம்’ அனுசரிக்கப்படுகிறது. ‘இதய நோய்கள் கண்ணெதிரே மறைந்திருக்கக்கூடும்: ஒரு துடிப்பைக் கூட தவறவிடாதீர்கள்’ என்பதே இந்த ஆண்டு உலக இதய தின அனுசரிப்பின் கருப்பொருளாகும்.
உலக இதயக் கூட்டமைப்பின் ஆய்வு தரவின்படி, உலகில் உயிரிழக்கும் மூன்று நபர்களில் ஒருவர் இதய நோயால் இறக்கிறார்; ஐந்து நபர்களில் ஒருவர் இந்நோயால் உரிய வயதிற்கு முன்பே உயிரிழக்கிறார். இதயக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்குப் பிறப்பின்போது இதயநோய் இருப்பது கண்டறியப்படாமல் விடப்படுகிறது. உலகளவில் இறப்பிற்கானமுக்கியக் காரணமாக இதய நோய் இருந்தபோதிலும், 20-க்கும் குறைவான நாடுகளே இந்த நோயைச் சமாளிப்பதற்கு தனிப்பட்ட பிரத்யேகத் திட்டத்தைக் கொண்டுள்ளன.
பெரும்பாலான இதய நோய்களைத் தவிர்க்க முடியும் என்றும்,ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் தடுத்து நிறுத்தக்கூடிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய காரணிகளால்தான் 80% இதய நோய் இறப்புகள் நிகழ்கின்றன என்றும் இதயவியல் சிகிச்சைநிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். சிறிய வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்வது மற்றும் அவற்றை நிலையாக கடைபிடிப்பதன் மூலம் மக்கள் தங்கள் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதய நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தினசரிவாழ்வில் தவறாமல் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும்,ஆரோக்கியமான இதயத்தைப் பராமரிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களை ஊக்குவிப்பதும் சிம்ஸ் மருத்துவமனை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தின் நோக்கமாகும்.
