சென்னை, செப்டம்பர் 2026: உலக இதய தின அனுசரிப்பின் ஒரு அங்கமாக, வி.எஸ் மருத்துவமனை குழுமம் தண்டையார்பேட்டையில் 4 கிலோமீட்டர் விழிப்புணர்வு நடைபயணத்தை ஏற்பாடு செய்து நடத்தியது. வி.எஸ் மருத்துவமனைகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர். எஸ். சுப்பிரமணியன், மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர். எஸ். சுந்தர், செயலாக்க இயக்குநர் திரு. முத்து சுப்பிரமணியன் மற்றும் குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரி திரு. பிரசன்னா சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில்,முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்., தண்டையார்பேட்டை வி.எஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இந்த நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது, மற்றும் அவசர காலங்களில் உரிய நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சையைப் பெறுவது என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு. சைலேந்திர பாபு,அவசர காலங்களில் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதை ஊக்குவிக்கும் வகையிலான ‘எமர்ஜென்ஸினா முதல்ல வி.எஸ்’ என்ற பெயரில் அவசர சிகிச்சை விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியதோடு, 044-6969-8000 என்ற அவசர மருத்துவ உதவிக்கான தொடர்பு எண்ணையும் அறிமுகம் செய்தார். மாரடைப்பு, பக்கவாதம் உட்பட நரம்பியல் பாதிப்புகள் மற்றும் விபத்து போன்ற பொதுவான அவசர கால சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த செய்முறை விளக்கங்களை வழங்கவும், முதலுதவி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வி.எஸ் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. இருதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவற்றின் எச்சரிக்கை அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் இதன் நோக்கமாகும். இந்த ஆண்டின் மையக்கருத்து, ‘இதய நோய்கள் கண்ணெதிரே மறைந்திருக்கக்கூடும்: ஒரு துடிப்பைக் கூட தவறவிடாதீர்கள்’ என்பதாகும். ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளை மக்கள் எளிதில் அடையாளம் காணவும், அவசர காலங்களில் உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாடவும் தூண்டுவதே இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் நோக்கமாகும்.
திரு. சி. சைலேந்திர பாபு பேசுகையில், “சமூகத்தை ஒன்றிணைத்து, மக்களை உடல் சார்ந்த செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்க ஊக்குவிக்கும் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டுள்ள வி.எஸ் மருத்துவமனைக்கு எனது பாராட்டுகள். நல்ல ஆரோக்கியமும் உடல் தகுதியும் சுறுசுறுப்பாக இருப்பதை மட்டும் குறித்ததல்ல; அது ஒரு கட்டுப்பாடான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவது குறித்தது. வயது வித்தியாசம் இன்றி அனைவரும் உடற்பயிற்சியை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும். உடற்தகுதிக்காக நாம் எடுக்கும் சிறிய, தொடர்ச்சியான முயற்சிகள் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்,” என்று கூறினார்.
பேராசிரியர் டாக்டர் எஸ். சுந்தர் கூறியதாவது: “எந்தவொரு மருத்துவ அவசரநிலைக்கும் உடனடி கவனமும் துரித நடவடிக்கையும் தேவை. எப்போது, எங்கு மருத்துவ உதவியை நாட வேண்டும் என்ற விழிப்புணர்வும், அறிவும் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எங்களின் ‘எமர்ஜென்ஸினா முதல்ல வி.எஸ்’ பிரச்சாரத்தின் மூலம்,பொதுவான மருத்துவ அவசரநிலைகள் குறித்தும், தாமதமின்றி சரியான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதன் அவசியம் குறித்தும் மக்களிடம் சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது நோக்கம். நெருக்கடியான மருத்துவ அவசரநிலை சூழல்களில், மக்கள் சரியான முடிவுகளைத் தக்க நேரத்தில் எடுக்க இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் உதவும் என்பது எமது நம்பிக்கை,” என்றார்.
சமூக நலனை இலக்காகக் கொண்ட இத்தகைய முயற்சிகளின் மூலம், நோய்த்தடுப்பு மற்றும் உரிய நேரத்திற்குள் சிகிச்சை பெறுவது அவசியம் என்ற முக்கிய செய்தியை மருத்துவமனை வளாகத்திற்கும் அப்பால், தான் சேவையாற்றும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் பணியை வி.எஸ் மருத்துவமனை தொடர்ந்து செய்து வருகிறது.
