
தாலி பறிப்பு நடந்த இடத்தில் அதிரடி ஆய்வு! பாழடைந்த குடியிருப்புகளை அகற்ற முக்கூர் சுப்பிரமணியன் MLA–சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின் வலியுறுத்தல்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஹவுசிங் போர்டு பகுதியில் பெண்ணைத் தாக்கி தாலி பறித்த சம்பவம் நடைபெற்ற இடத்தில், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் முக்கூர் சுப்பிரமணியன், சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
செய்யாறு ஹவுசிங் போர்டு பகுதியில் சுமார் 180 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் பெண் ஒருவரை கருங்கல்லால் தாக்கி, அவரது கழுத்தில் இருந்த தாலிக் கயிற்றை அறுத்து மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் முக்கூர் சுப்பிரமணியனிடம் புகார் தெரிவித்தனர். அப்போது, ஹவுசிங் போர்டு பகுதியில் பயன்பாடின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ள குடியிருப்புகள், தெருவிளக்குகள் செயல்படாத நிலை, அதிகளவில் வளர்ந்துள்ள புதர்கள் ஆகியவற்றால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், பாழடைந்த குடியிருப்புகளுக்குள் மர்ம நபர்கள் வந்து செல்வதாகவும் புகார் கூறினர்.
இதையடுத்து, முக்கூர் சுப்பிரமணியன், சார் ஆட்சியர் அம்பிகா ஜெயினுடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பயன்பாடின்றி சிதிலமடைந்து காணப்படும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டனர்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பயன்பாட்டில் இல்லாத சிதிலமடைந்த குடியிருப்பு கட்டிடங்களை உரிய முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக்கூர் சுப்பிரமணியன், சார் ஆட்சியர் அம்பிகா ஜெயினிடம் வலியுறுத்தினார். மேலும், தெருவிளக்குகளை சீரமைத்து, புதர்களை அகற்றி, இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது வட்டாட்சியர் திருவேங்கடம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் அரங்கநாதன், துரை, வழக்கறிஞர் முனுசாமி, மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
