
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவிக்கையில்,
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசு ’தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்” 2008-இல் அமைத்து திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நலவாரியத்தின் மூலம் திருநங்கை/ திருநம்பி/ இடைபாலினருக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானியத்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வுதியம், சுயஉதவிக்குழு பயிற்சி மற்றும் மானியத்தொகை, காப்பீட்டுத்திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் திருநங்கை/திருநம்பிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள 2026-2027-ஆம் நிதியாண்டில் நடைபெறும் இச்சிறப்பு முகாமில் திருநங்கை/திருநம்பி/இடைபாலினருக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் தொடர்புத்துறைகள் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கான துறைசார்ந்த திட்டங்கள் குறித்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்தும் எடுத்துரைத்தனர். திருநங்கைகளுக்கான ஆதார் அட்டை திருத்தம், ரேசன் அட்டை திருத்தம் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டை விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இம்முகாமில், 34 திருநங்கைகளுக்கு ஆலங்குளம் வட்டாரத்தில் உள்ள குத்தப்பாஞ்சான் கிராமத்தில் உள்ள இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டாவினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.வீராசாமி,கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) மதியழகன், இயக்குநர் – கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தியாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம் மாரியம்மாள், மாவட்ட வழங்கல் அலுவலர் பால்துரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
