
திருவண்ணாமலை, ஜூலை 24:
ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருள்மிகு பச்சையம்மன்–மன்னார்சாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வருகை தந்து, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பானதாக கருதப்படுவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது குலதெய்வமான பச்சையம்மனை தரிசித்து, குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் வளமான வாழ்க்கை வேண்டி சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர்.
கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக தேவையான அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் வழிபாடு சீராக நடைபெற்றது.
கோயிலின் செயல் அலுவலர் சிலம்பரசன் தலைமையில் பக்தர்களுக்கான குடிநீர், வரிசை ஒழுங்கு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கோயில் மணியக்காரர் கார்த்தி மற்றும் கோயில் ஊழியர்கள் பக்தர்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி வழிபாடு சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்திருந்தனர்.
