
திருவண்ணாமலை, ஜூலை 7
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் முகாமில் பொதுமக்களிடமிருந்து ஒரே நாளில் மொத்தம் 1,081 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் அறிவுறுத்தினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார். கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை பயிர்க்கடன், புதிய நீர்தேக்கத் தொட்டி அமைத்தல், தாட்கோ கடனுதவி, கூட்டுறவு சங்க பயிர்க்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 899 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மனுவின் மீதும் விரைந்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனுடன், செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 104 மனுக்களும், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 78 மனுக்களும் பெறப்பட்டன. இவ்வாறு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தம் 1,081 மனுக்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26,414 மதிப்பிலான காலிப்பர் (Caliper) கருவிகளையும், ஒரு மாற்றுத்திறனாளி மாணவிக்கு ரூ.52,350 மதிப்பிலான பிரெய்லி வாசிப்பான் (Braille Reader) கருவியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் வழங்கினார்.
மேலும், பட்டா கோரி அளிக்கப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, வருவாய் துறை சார்பில் மூன்று பயனாளிகளுக்கு பட்டா ஆணைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் பூ. காஞ்சனா, உதவி ஆணையர் (கலால்) செந்தில்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) இளவரசன், திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலன்) கலைச்செல்வி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மாலதி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
