
நாட்றம்பள்ளி:7
திருப்பத்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 20 கிலோ 100 கிராம் குட்காவை நாட்றம்பள்ளி போலீசார் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து பேருந்து, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் வழியாக குட்கா கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் தமிழக–ஆந்திர எல்லையில் உள்ள கொத்தூர் சோதனைச் சாவடியில் நாட்றம்பள்ளி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தில் பயணம் செய்த தாமலேரிமூத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ஜெய் (45) என்பவரிடம் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக 5 கிலோ 700 கிராம் குட்கா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தபால் மேடு பகுதியைச் சேர்ந்த ரபீக் பாஷா மகன் பைரோஸ் பாஷா (30), ரவீந்திரன் மகன் நித்தின் (32) ஆகியோர் மளிகைக் கடைகளில் விற்பனை செய்வதற்காக 14 கிலோ 400 கிராம் குட்காவை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மொத்தம் 20 கிலோ 100 கிராம் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜெய், பைரோஸ் பாஷா, நித்தின் ஆகிய மூவர் மீதும் நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
