
சிறப்பு பட்டா குறைதீர்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
முதுகுளத்தூர், ஜூலை 7: இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு பட்டா குறைதீர்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.மா.சிவகுரு பிரபாகரன், ஐ.ஏ.எஸ்., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, கணினி திருத்தம், உட்பிரிவு பட்டா உள்ளிட்ட நிலம் தொடர்பான பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விரைந்து பரிசீலித்து தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்களுக்கு அரசு சேவைகள் எளிதில் கிடைக்கவும், நிலம் தொடர்பான கோரிக்கைகள் விரைவாக தீர்க்கப்படவும் இதுபோன்ற சிறப்பு குறைதீர்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு. ஞானசவண பெருமாள், முதுகுளத்தூர் வட்டாட்சியர் திரு. கோகுல்நாத் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
